search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் கொள்ளை"

    காரிமங்கலம் அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் ஒன்றியம் பேகாரஅள்ளியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த மாதம் 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் தர்மபுரியை சேர்ந்த சபரி (வயது 40) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை கிராமமக்கள் கோவில் வழியாக சென்றனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கும்பாபிஷேகம் நடந்தவுடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்து இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டு மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காரிமங்கலம் பகுதியில் மர்ம ஆசாமிகள் கோவில்களை குறி வைத்து தொடர்ந்து நகை, உண்டியல் பணத்தை திருடிச்செல்லும் துணிகர சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    திருக்கனூரில் 2 கோவில்களில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர்- மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஆத்மலிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சாமிதரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது போல் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு தேவனாத பெருமாள் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல் பணத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    திருக்கனூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மெஞ்ஞானபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ளது நங்கைமொழி கிராமம். இங்கு மந்திரமூர்த்தி என்ற இரட்டை சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை மேலராமசாமியாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல்(76) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த கோவில் பூசாரி உலகுபிள்ளை சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு 7மணிக்கு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்று விட்டார். மறுநாள் காலையில் பூஜை செய்ய கோவிலை திறக்க சென்றபோது கோவில் கேட் உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகி தங்கவேல் மெஞ்ஞானபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கொள்ளை சம்பவம் மூன்றாவது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆரணியில் விநாயகர் கோவில் உண்டியல் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி பாச்சா உடையார் தெருவில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு கோவில் வாளாகத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு கோவில் பூசாரி சுப்பிரமணியம் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டிச் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூசாரி சுப்பிரமணியம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் அருகே கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த இருளஞ்சேரி கிராமத்தில் கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது. 1,100 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இதுவாகும்.

    இக்கோவிலில் நேற்று பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்த பிறகு இரவு கோவிலை பூசாரிகள் பூட்டிச் சென்றனர்.

    இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டு தனியாக கழற்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். உண்டியலில் இருந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இக்கோவிலில் பஞ்சலோக சிலைகள் இருந்தன. இங்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பஞ்சலோக சிலைகள் திருப்பாச்சூரில் உள்ள வசிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சலோக சிலைகள் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது.

    கடந்த ஆண்டு இக்கோவிலில் கலசம் திருடு போயிருந்தது. தற்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை போயிருப்பது கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    ஆம்பூர் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் பணத்தை திருடி சென்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே 9-வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து முருகர் கோவில் கட்டினர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு முருகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    5 நாட்களுக்க முன்பு தான் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி அருகே 2 கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி டவுன் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம தேவதை என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    நகரில் போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவில் மதில் சுவர் உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்து ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    அதேபோல் மும்மனி முத்து நகரில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து ஆயிரத்துக்கும் அதிகமான காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இரண்டு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    திருவையாறில் விநாயகர் கோவிலில் உற்சவர் சிலை மற்றும் கலசம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு ஸ்ரீராம் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் கோவிலில் கோபுர கலசங்களை எடுத்து தனியாக கோவிலுக்குள் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோவில் குருக்கள் , பூஜை செய்ய வந்தார். அப்போது கோவிலில் இருந்த 2½ அடி உயர வெண்கல உற்சவர் சிலை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவிலில் இருந்த கலசமும் கொள்ளை போய் இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலும் உடைக்க முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது. நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து உற்சவர் சிலை மற்றும் கலசத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் பற்றி திருவையாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    உற்சவர் சிலை மற்றும கலசம் ஆகியவை கொள்ளை போய் இருப்பதால் சிலைகள் கடத்தல் கும்பலின் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாப்பம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ளது பாப்பம்பட்டி. இங்குள்ள ஜானகி நகரில் உள்ளது விநாயகர் கோவில். நேற்று இரவு பூஜைகளை முடித்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலை சிறப்பு வழிப்பாட்டுக்காக பக்தர்கள் மற்றும் பூசாரி கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவிலில் இருந்த வேலால் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உண்டியலை பார்த்தபோது அதில் இருந்த காணிக்கை பணம் அனைத்தும் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கோவில் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும், இந்த ஆண்டு சுற்றுச்சுவர் கட்ட உண்டியல் திறப்படாமல் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். அதில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் காணிக்கை இருந்திருக்கும் என்று கூறினார்.

    சேத்துப்பட்டு அருகே அம்மன் கோவில் உண்டியல் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே உள்ள கரிப்பூர் கிராமம் எல்லையில் அமைந்துள்ளது கருமாரியம்மன் கோவில். இந்த கோவில் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு கோவிலில் வைக்கட்டிருந்த உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் கோவிலின் உண்டிலை உடைத்து அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு உண்டியலை கோவில் அருகே வீசி சென்றுவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கோவில் உண்டியல் உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    பாளையில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை கோட்டூர் ரோட்டில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவில் கொடை விழா நடந்து முடிந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டதோடு, காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு கோவிலில் வழிபாடு முடித்து அனைவரும் சென்று விட்டனர். நள்ளிரவு யாரோ மர்ம நபர் அங்கு வந்துள்ளான். கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அவன் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றான்.

    கொடை விழா முடிந்ததால் உண்டியலில் ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும் என தெரிகிறது. அதை மர்ம நபர் அள்ளி சென்றான். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் முன்பக்க கதவும், உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தார்கள். கொள்ளை நடந்த கோவில் அருகே கண்காணிப்பு கேமிராக்கள் ஏதும் உள்ளதா? அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் 3 உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு சவுந்தர ராஜபெருமாள் கோவிலில் வருடம் முழுவதும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இக்கோவிலில் பரிகார மூர்த்தியாக விளங்கும் சொர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் நடக்கும் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

    இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோவிலில் நாள் தோறும் அன்னதானமும் நடந்து வருகிறது. நேற்று ஆடி பூரம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு வரை பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இன்று காலையில் அர்ச்சகர்கள் கோவிலுக்கு வந்தபோது 3 உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. கோவிலில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமிராவை வைத்து பதிவான வீடியோவை போலீசார் பார்த்தனர்.

    முகமூடி அணிந்த வாலிபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து கேமிராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுவரை இல்லாத சம்பவமாக தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் கொள்ளை நடந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×